கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்ற கோவை மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில் அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தகவல் வெளிவந்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையமான இந்த வளாகத்தில் சென்னை, திருப்பதி, பெங்களூரு, திருநெல்வேலி, புதுச்சேரி, தஞ்சாவூர் போன்ற தமிழக மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் தினசரி மொத்தம் 130 பேருந்து சேவைகள் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே கோவை காந்திபுரம் பகுதியின் இரு இடத்தில் நகர பேருந்து நிலையமும், மற்றொரு இடத்தில் மத்திய பேருந்து நிலையமும் உள்ளது. மூன்றாவதாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையமும் (திருவள்ளுவர் பேருந்து நிலையம்) இருப்பதால், இதை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றினால் அது இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என கருதப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் உள்ளது. போதுமான பார்க்கிங் வளாகம், பயணிகள் அமர இடவசதி, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை தேவை என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் தற்போது நகர்வதால் இந்த பேருந்து நிலையத்தை மாற்ற ஆலோசித்து வந்தது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது  என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதே சமயம் 2010ல் கோவை மாநகரம் மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.8 கோடி மதிப்பில்  திறக்கப்பட்ட மாநகராட்சி பேருந்து நிலையம் முழுவதுமாக பயன்படுத்தப்படுவதில்லை என்ற வருத்தம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது.
INSIDEBUSSTAND scaled