இந்திய ரூபாயின் வெளியீடு, விநியோகம் மற்றும் நாட்டின் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் முக்கிய அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் பணப் பரிவர்த்தனை முறைகளை நிர்வகிப்பதோடு, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றையும் மேற்பார்வை செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் பாலிமர் அடிப்படையிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி கவனம் ஈர்த்துள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியை ரிசர்வ் வங்கி முதன்முதலில் 2012-ஆம் ஆண்டில் தொடங்கியது. ஆனால் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ரீதியான பல்வேறு சவால்கள் காரணமாக அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

தற்போது, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழிவதாலும், விரைவாக சேதமடைவதாலும் அவற்றை அடிக்கடி மாற்றி அச்சிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கிக்கு கணிசமான செலவினம் ஏற்படுகிறது.

இதற்கு மாற்றாக பாலிமர் அடிப்படையிலான பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக நீடித்த தன்மை கொண்டவை. அவை நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கும் என்பதால், புதிய நோட்டுகளை அச்சிடும் செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக் நோட்டுகளில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பது எளிதானதாக இருப்பதால், கள்ள நோட்டுகள் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் குறையும். குறைந்த உற்பத்திச் செலவு, அதிக ஆயுட்காலம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமானால், அவற்றை கையாளும் வகையில் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிமர் ரூபாய் நோட்டுகள் உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் நாணய நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.