1.9.2014 க்கு முன் ஓய்வுபெற்றவர்கள், அதன் பின் ஓய்வுபெற்றவர்கள் என பாகுபாடு இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் முழு சம்பளத்திற்கான உயர் ஓய்வூதிய வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை இ.பி.எஃப்.பென்சர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (பி.ஃப் ஆபீஸ்) முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை நோக்கி பல வலியுறுத்தல்களையும் , மாநில அரசை நோக்கியும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இ.பி.எஃப் ’95 பென்சனர்களுக்கு குறைந்தபட்ச பென்சனாக ரூ.9000 பஞ்சப்படியுடன் வழங்கிட கோரியும், இடைகாலமாக 2013ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பகத்சிங் கோசரியா எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி பரிந்துறைத்த ரூ.3000 பஞ்சப்படியுடன் வழங்கிட கோரியும், தொழிலளார்கள் வருங்கால வைப்பு நிதியை பங்கு மார்க்கெட் “சூதாட்டத்தில்” முதலீடு செய்வதை தடுத்திடவும், மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில்கட்டண சலுகையை உடனே வழங்கிட வேண்டும் எனவும், ஓய்வூதியம் பெரும் அனைவருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநில அரசை நோக்கி வலியுறுத்தப்பட்டன.
அதே சமயம், மாநில அரசிடம், மிக குறைந்த பென்சன் வாங்கும் பென்சனர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாதம்தோறும் ரூ.2,000 வழங்கிட வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

