கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

வால்பாறையின் குளிர்ச்சியான காலநிலை, சாரல் மழை, அடர்ந்த பனிமூட்டம், பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இயற்கை எழில் ஆகியவற்றை ரசிப்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, வால்பாறையை அடுத்துள்ள நல்லமுடி காட்சி முனை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இங்கு வருகை தரும் ஒவ்வொரு நபரிடமும் வனத்துறை சார்பில் ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அதற்கேற்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக கழிப்பிட வசதி, போதுமான கார் நிறுத்துமிடம், குடிநீர், அமரும் இடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லாததால் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, நல்லமுடி காட்சி முனை பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த தமிழக அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.