தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ‘பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம்’ கடைபிடிக்கப்படுகிறது.
விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பண்ணை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரிடையே பார்த்தீனியத்தின் தீய விளைவுகள் மற்றும் அதன் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஜபல்பூர் ஐசிஏஆர் -களை ஆராய்ச்சி இயக்குநரகத்தின்’களை மேலாண்மைக்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின்’ முதன்மை விஞ்ஞானி சௌத்ரி கலந்துகொண்டு, பார்த்தீனியம், அதன் பரவல், மனித மற்றும் விலங்கு ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த பார்த்தீனியம் மேலாண்மை முறைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், மாணவர்களுக்குப் பார்த்தீனியத்தின் தீய விளைவுகள் மற்றும் மேலாண்மை குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பார்த்தீனியம் தாவரங்களின் நேரடி மாதிரிகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணியான ‘ஜைகோகிராம்மா பைக்கோலராட்டா’ என்ற மெக்சிகன் வண்டு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
