கே.ஐ.டி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி சார்பில் 10-வது சர்வதேச அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மேலாண்மை மாநாடு நடைபெற்றது.
டி.ஆர்.டி.ஓ பாதுகாப்பு அமைச்சகம் மூத்த நிலை விஞ்ஞானி மற்றும் கூடுதல் இயக்குனர் ராம்பிரபு, ‘வகுப்பறைக்கு அப்பால்: உங்கள் பொறியியல் எதிர்காலத்திற்கான வெற்றிப் பாதை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்ப அறிவுடன் ஆராய்ச்சித் திறன், தலைமைப் பண்பு, தகவல் தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் சமூக நுண்ணறிவு ஆகிய திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மின்சாரம் மற்றும் ஆற்றல் சங்கம் மற்றும் ஐ.இ.இ.இ மெட்ராஸ் பிரிவின் தலைவர் வெங்கடேஷ்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு மனித சிந்தனையை மாற்றுவதற்காக அல்ல; மனித சிந்தனைத்திறனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். தரமான ஆராய்ச்சி மற்றும் சமூகப் பயனுள்ள கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மாநாட்டிற்கு இந்தியா, அமெரிக்கா, சீனா, தைவான், மலேசியா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1,074 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. பரிசீலனைக்குப் பின்னர் 200 ஆய்வுக் கட்டுரைகள் வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று தங்களது ஆய்வுக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் பொங்கலூர் பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமை செயல் அலுவலர் மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.
