சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கவும், ஓசூர் அல்லது கிருஷ்ணகிரியில் புதிய விமான நிலையத்தை கட்டவும், கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டியது தமிழ்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது: தேசிய அளவில் முக்கிய விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சரக்குகளை அனுப்ப பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, நடைமுறையில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வரும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை பெங்களூரு விமான நிலையத்திற்கு அனுப்பி அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக கைவிட்டுள்ள நிலையில் சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கவும், ஓசூர் அல்லது கிருஷ்ணகிரியில் புதிய விமான நிலையத்தை கட்டவும், கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டியது தமிழ்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

சென்னையில் புதிய விமான நிலையத்தை அமைக்காவிட்டால் ஆந்திர மாநிலத்தில் அமைய உள்ள விமான நிலையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்குவார்கள். தொழில் நிறுவனங்களும் அம்மாநிலத்திற்கு இடம் மாறக்கூடும். தமிழ்நாட்டில் ஒசூரில் விமான நிலையத்தை கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை நாம் பார்க்கிறோம். அத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி கொண்டு வராவிட்டால் தமிழ்நாடு வரலாறு காணாத விளைவுகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும்.

முதலமைச்சர் விஜய் முடிவுகளை எடுக்கும் போது சற்று தீர ஆராய்ந்து தொழில் துறையினருடன் கலந்தாலோசித்து மிக அவசரமாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தொழில்துறை அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் சென்னையை விடுத்து அருகிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு சென்று விடும்.

விமான நிலையங்களை கட்டமைக்க இன்று நடவடிக்கை தொடங்கினால் பணி நிறைவடைய 5 ஆண்டுகள் தேவைப்படும். எனவே தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை, முன்னாள் தலைவர் நந்தகுமார் கூறியதாவது: கோவை மட்டுமின்றி சுற்றுப்புற ஏழு மாவட்ட மக்கள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்து தமிழக அரசு வழங்கியுள்ள நிலையில், குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டும் சில பிரச்சனைகள் உள்ளது. அதற்கு விரைவில் மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். நிலங்களை முழுமையாக ஒப்படைத்து விட்டால் விரிவாக்க திட்ட பணிகளை விமான நிலைய ஆணையம் துரிதமாக செயல்படுத்தும்.

சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப விமான நிலைய வளாகத்தில் புதிய வருகை, புறப்பாடு கட்டிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஓடுபாதை நீளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த விமான நிலைய ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஓடுபாதை நீளம் அதிகரித்தால் மட்டுமே பெரிய விமானங்களை இயக்க முடியும். இதனால் பல்வேறு உலக நாடுகளுக்கு புதிதாக விமான சேவைகள் தொடங்கும். பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு போக்குவரத்தும் கோவை விமான நிலையத்தில் சிறப்பான வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.