பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் சார்பில், “ஒரு நூற்றாண்டு கால அக்கறை, சிறப்பு மிக்க எதிர்காலம்: நாளைய செவிலியர் கல்வியை மாற்றியமைத்தல்” என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது.

மாநாட்டை கல்லூரியின் முதல்வர் ஜெயதீபா தொடங்கி வைத்தார். இம்மாநாடு செவிலியர் கல்வியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறைத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய தளமாக அமைந்தது.

செயற்கை நுண்ணறிவு, உருவகப்படுத்தல் அடிப்படையிலான கற்றல், அனைவரையும் உள்ளடக்கிய கற்பித்தல் முறைகள் மற்றும் பல்துறை ஒத்துழைப்பு ஆகியவை செவிலியர் நடைமுறை மற்றும் எதிர்காலப் பயிற்சியை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பது குறித்து ஆராயப்பட்டது.

மாநாட்டில் எல்சா சரதோம்பி தேவி, ஜெயந்தி சண்முகம், ஷீஜா ராஜன், ரீட்டா லகானி, ஜெனிட் ஆஸ்போர்ன், கமலா இசக்கிமுத்து, அனுராதா, கவிதா, மும்தாஜ், மகாராணி மற்றும் ஜெயதீபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புகழ் பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டு, செவிலியர் கல்வியில் உருவாகிவரும் புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசினர்.

வகுப்பறைக் கற்றல் முதல் மருத்துவமனைப் பயிற்சி வரை, உள்ளூர் செவிலியர் நடைமுறை முதல் உலகளாவிய சுகாதாரத் தாக்கம் வரை, செவிலியர் கல்வியின் விரிவான மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் பரிமாணங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.