கோவையில் ‘இன்டெக் 2026’ வேண்டும் சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியில் 700க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை கொடிசியா சார்பில் நடத்தப்படும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியான இன்டெக் 2026 கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 4 தொடங்கிய இந்த கண்காட்சி ஜூன் 8 வரை நடைபெறுகிறது.
கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள 7 பெரிய அரங்குகளிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினர், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் உலகத் தரத்திலான அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் இந்திய தொழில்துறையினருக்கு சர்வதேச சந்தை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், தொழிற்சாலை ஆட்டோமேஷன், ஸ்மார்ட் மேனுபேக்சரிங், டிஜிட்டல் தொழிற்சாலை அமைப்புகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன லேசர் கட்டிங் இயந்திரங்கள், சி.என்.சி.மெஷின்கள், துல்லியமான அளவீட்டு கருவிகள், தொழில்துறை சோதனை உபகரணங்கள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பல்வேறு புதிய இயந்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
வாகன உற்பத்தித் துறை, விண்வெளித் துறை, பொறியியல் உற்பத்தி, உலோகவியல், ரசாயனத் தொழில், தொழில்துறை பாதுகாப்பு, மின்னணு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தின் முக்கிய தொழில்துறைகளான பம்ப், மோட்டார், வார்ப்பாலை, இயந்திர உற்பத்தி மற்றும் துல்லிய பொறியியல் துறைகளுக்கு தேவையான நவீன உபகரணங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதால், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.
