புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சைக்கான நிதி உதவி வழங்கும் நோக்கில், மிராக்கிள் இன்டக்கிரேடெட் ஹெல்த் சென்டர் மற்றும் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் சார்பில், கோவை அத்லெட்டிக்ஸ் அசோசியேஷன் வழிகாட்டுதலுடன் வரும் 22ம் தேதி மிராக்கிள் மாரத்தான் நடைபெறுகிறது.
இதில், 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பிரிவிலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 5 கி.மீ., பிரிவிலும், குழந்தைகளுக்கு 2 கி.மீ., பிரிவிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. பங்கேற்பதற்கான பதிவு கட்டணம் 300 ரூபாய்.
கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற மிராக்கிள் மாரத்தான் மூலம் 44 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதில், இதுவரை 41.50 லட்சம் ரூபாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக செலவிடப்பட்டுள்ளது. மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு டி-ஷர்ட், சிற்றுண்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு பொள்ளாச்சி, உடுமலை சாலையில் உள்ள பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாரத்தான் துவங்குகிறது. பங்கேற்பாளர்கள் அனைவரும் காலை 5 மணிக்கு வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், இணை செயலர் கோவிந்தசாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், கோவை மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் செயலர் சீனிவாசன், மிராக்கிள் இன்டக்கிரேடெட் ஹெல்த் சென்டர் முதன்மை இயக்குனரும் மருத்துவ விஞ்ஞானியுமான டாக்டர் பிரதீப், என்.ஐ.ஏ மக்கள் தொடர்பு மேலாளர் நாகராஜன், மிராக்கிள் முதுநிலை மேலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
