கோவை மாநகரில் இந்த வாரமும் (15.11.26 முதல் 21.11.26 வரை) கடந்த வாரத்தை போலவே பெரிய மாற்றங்கள் இன்றி சீரான வானிலையே நிலவ சாத்தியமுள்ளதாக கோவையை சேர்ந்த வானிலை ஆய்வளர் சுஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :-

நமது மாநகரத்தில் காலை நேரங்களில் லேசான பனிப்பொழிவு காணப்படும், மதிய வேளைகளில் வழக்கமான வெப்பநிலை நிலவும். பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.இரவு நேரங்களில் வெப்பநிலை கணிசமாகக் குறையத் தொடங்கும்.

குறிப்பாக, இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதால், புறநகர் பகுதிகளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்படும்.

மழை வாய்ப்பைப் பொறுத்தவரை, புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது புயல் சின்னம் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்கிறது. இது சென்னைக்கு அருகே கரையை கடக்கும் சூழல் இருந்திருந்தால் கோவையில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், தற்போது புயல் ஆந்திரா நோக்கிச் செல்வதால், இந்த வாரம் கோவையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.