கோவை, காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் இன்று இரண்டாவது நாளாக நூலக வளாகத்தில் தீவிரச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெருமளவில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகப் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ​அகல் விளக்கு என்ற பதிப்பகத்திடமிருந்து பல லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், சந்தையில் வழக்கமாக ரூ.300-க்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு, சுமார் ரூ.1,395 வரை விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்கள் நூலகத்தில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டன. மேலும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகளும், எழுத்தாளர்களும் வலியுறுத்தினர்.

​இதனை அடுத்து, புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக திமுக சார்பிலும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் தனித்தனியே புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்தப் புகார்களின் அடிப்படையில், கடந்த நவம்பர் 10ம் தேதி ஏ.டி.எஸ்.பி இமானுவேல் சேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் நூலகத்தில் முதற்கட்ட சோதனை மற்றும் விசாரணையை மேற்கொண்டனர்.

​இதன் தொடர்ச்சியாக, இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பெரியார் அறிவுலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

​நூலகத்தின் 3வது மாடியில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் தொகை, டெண்டர் நடைமுறைகள் மற்றும் அதற்கான பில்களின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர்.