தவெக ஆட்சியில் அமைச்சர்களும், அரசும் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளது. மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் பணிகளை துவக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றிகளை தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்பொழுது பொறுப்பேற்றுள்ள அரசு திமுகவை விமர்சிப்பதை மட்டுமே குறியாக கொண்டிருக்கிறது. மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. துறையின் அமைச்சர்களும் துறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்று செயல்படவில்லை.
தற்போதைய அரசு அதன் பணிகளை மறந்து வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அரசு தவறு செய்கின்ற பொழுது அதனை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை.
மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி வெற்று கவர்ச்சியில் மக்களிடம் ஓட்டுகளை வாங்கியுள்ளார்கள். மாற்றம் என்றால் என்னவென்று முதலில் கூற வேண்டும். கல்வி, மருத்துவம், தொழில் துறை ஆகியவற்றில் மாற்றம் என்று கூறுகிறார்கள். கல்வி மற்றும் மருத்துவத்தில் தமிழ்நாடு ஏற்கனவே முதலிடத்தில் தான் உள்ளது.
எங்கள் ஆட்சியில் மின்வெட்டு இல்லாத ஆட்சியாக இருந்தது. தற்பொழுது மின்வெட்டு காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு வண்டி மீது ஏறி நின்று பொய்யான கருத்துக்களை கூறி அவதூறு பரப்பி பாட்டு எல்லாம் பாடினார்கள். ஆனால் டாஸ்மாக் விவகாரத்தில் தற்பொழுது வரை அந்த துறையின் அமைச்சர் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் அன்று பாடிய பாட்டுக்கு என்ன பதில்.
என்னை பொருத்தவரை தவெக என்பது ரீல்ஸ் ஆட்சி. இன்னும் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளார்கள். அமைச்சர்களும், அரசும் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளது. மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் பணிகளை துவக்கவில்லை. பணியை துவக்குவார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் இல்லை. பல்வேறு அமைச்சர்கள் கூறுவதைப் போலவே ஒரு மாத காலம் காத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தார்.
