கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் செ.ம. வேலுச்சாமி இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்த முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை வந்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்க சூலூர் சென்ற அவர், அதன் பின்னர் விமான நிலையம் வந்து சென்னை புறப்பட்டார். விமான நிலையத்தில் அவரை வழியனுப்ப தொண்டர்கள் பெருந்திரளாக கூடி இருந்தனர்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் வழியனுப்ப வந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நேரில் வரவில்லை.
அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் இந்த நிலையில் விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி சென்றார்.
