கோவையில் நடைபெற்ற திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர் கூறியதாவது: மின்சாரத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், மின்சார துறையில் உள்ள பல்வேறு இடையூறுகளை நீக்கி, இடையூறுகள் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாய கடனை பொறுத்தவரை ஆட்சி ஏற்றபின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சிறுகுறு விவசாயிகள் ஐம்பதாயிரம் வரை தள்ளுபடி செய்ய முடியும் என்பதே உறுதியான நிலை.

விஜய் முதல்வராக ஆட்சி பொறுப்பு ஏற்று மூன்று வாரங்கள் தான் ஆகியுள்ளது. அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளை சீரமைக்க நாமும் சில நாட்கள் கால அவகாசம் தர வேண்டும். சில காரணங்களால் தமிழகத்தில், போதைப்பழக்கம், உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் கண்டிப்பாக போதை கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என நம்புவோம்.

கடந்த பத்து வருடங்களாக திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். திமுக சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம், தற்பொழுதும் திமுக உடன் தான் பயணிக்கிறோம் என்றார்.