கோவை மாநகரம் காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா கடந்த திமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. இதன்,முதல்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் செம்மொழி பூங்கா திட்டம் தொடர்பாக சில பில்களை சம்மந்தப்பட்ட அரசு துறையினர் ஏற்று, தொகை விடுவிப்பது தொடர்பாக காரசாரமாக பேசிய தொலைபேசி உரையாடல் என 2 ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதில் அரசு உதவி பொறியாளர் ஒருவரிடம் பில்களுக்கு ஒப்புதல் தரச்சொல்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் பேசுகிறார். மறுபக்கம் தான் இந்த பில்லை தயாரிக்கவில்லை, இதில் பணியாற்றியது மற்றொரு அரசு உதவி பொறியாளர் தான், இதற்கு ஜி.ஓ. எனும் அரசனை இல்லை என அவர் வாதாடுகிறார். இதனால் செம்மொழி பூங்கா கட்டுமானம் பற்றி சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து விஷயமறிந்த சிலரிடம் பேசியபோது, செம்மொழி பூங்கா திட்டம் மாநாட்டு மைய வளாகம் மற்றும் பூங்கா வளாகம் என 2 ஆக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த ஆடியோவில் பேசப்படுவது பூங்கா தொடர்பான பணிகளாக இருக்கலாம் எனவும், செம்மொழி பூங்கா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை தாண்டி திட்டத்திற்கான சில பணிகள் நடைபெற்றிருக்கலாம், அதை வேறு ஒரு அதிகாரி செய்ய அனுமதித்து இருப்பார். இப்போது இது தொடர்பாக மேற்பார்வை செய்யும் மற்றவொரு அதிகாரியிடம் இதற்கான கட்டணத்தை விடுவிக்க கேட்டுக்கொள்ளும் போது, அதை அவர் அரசு ஆணை இல்லாமல் எப்படி செய்யமுடியும் என விவாதித்து இருக்கலாம், என கருத்து தெரிவித்தனர்.

இது பற்றி மாநகராட்சியில் ஏ.ஈ. யாக பணிபுரியும் கணேஷன் எனும் 2 பேரிடம் பேசியதில் ஒருவர் தான் அது இல்லை, வேறு ஒருவர் உள்ளார் எனக்கூற, மற்ற ஒருவரிடம் பேசியபோது, ” அந்த ஆடியோ தவறு. தவறுதலாக ஆடியோவை போட்டு விட்டனர். அப்படி எந்த பிரச்னையும் இல்லை,” என கூறினார். நீங்கள் தான் அந்த ஆடியோவில் வரும் நபரா என கேட்டதற்கு ” இல்லை, தவறாக வந்துவிட்டது, விடுங்கள், எந்த பிரச்னையும் இல்லை, ” என அவர் கூறினார்.