மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை அடுத்து கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டம் மற்றும் கோவை-கரூர் பசுமைவழிச் சாலை திட்டம் ஆகியவை கைவிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டமும் , கரூர்-கோவை பசுமைவழிச் சாலை திட்டமும் 2016ல் முன்மொழியப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் சுமார் ரூ.7,565 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டது. இத்திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையும் 2018ல் உறுதியானது.

81 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு மட்டும் ரூ.3945.86 கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இது நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை கணியூர் மற்றும் மதுக்கறரயுடன் இணைக்கும் வழியில் திட்டமிடப்பட்டது.

இந்த புறவழிச்சாலை திட்டத்தின் மூலம் மொத்தம் 6 தேசிய நெடுஞ்சாலைகள் – அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு ஆகிய நெடுஞ்சாலைகள் இணையுமாறு இது திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் எனவும் சரக்கு போக்குவரத்தும், வணிக வளர்ச்சியும் மேம்படும் என்று கணிக்கப்பட்டது.

அதேபோல 120 கிலோமீட்டர் கொண்ட கோவை-கரூர் பசுமைவழிச் சாலை திட்டம் மூலம் இரு நகரங்களையும் 60 முதல் 90 நிமிடங்களில் அணுக முடியும் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது.ஆனால் தற்போது இந்த இரு திட்டங்களும் கைவிடப்படுவதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருக்கிறது என தகவல் வெளிவந்துள்ளது.

அதேநேரம் புதிதாக திருச்சி-கரூர்-கோவை பசுமை வழி சாலை திட்டம் அமையும் எனவும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி, அதற்கு ஒப்புதல் கிடைத்த பின்னரே நிலம் கையகப்படுத்துவது மற்றும் திட்டத்தின் மதிப்பீடு ஆகியவை இறுதியாகும் என்று கூறப்படுகிறது.

கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு சாத்தியக்கூறு உள்ளதா என்பதை பொறுத்து எதிர்காலத்தில் அதை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும் அப்போது போக்குவரத்தின் தேவை, நிதி ஆதாரம் மற்றும் அரசு ஒப்புதல் கிடைக்கும் போது, இத்திட்டம் செயல்படுத்தப்படலாம் என்று தெரிய வருகிறது.

இந்த நடவடிக்கை கோவையின் வருங்கால வளர்ச்சிக்கு கைகொடுக்காது என்ற கருத்து தொழில்துறையினர், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த 2 திட்டங்களையும் துவங்கவேண்டும் என்பதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி யிடம் வலியுறுத்த தொழில்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

படம் : விளக்கத்திற்காக மட்டும்.