கோவையைச் சேர்ந்த முன்னாள் திமுக பிரமுகரான மீனா ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராக மீனா ஜெயக்குமார் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு திமுக மகளிரணி துணைச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2022ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்த போது, கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அவரது பெயர் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. மேயராக விரும்பி வாய்ப்பு கேட்ட நிலையில், உட்கட்சி அரசியலால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் சீட் கேட்டு, மனு தாக்கல் செய்து, வேட்பாளர் நேர்காணலிலும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல், சிங்காநல்லுார் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
அண்மையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டினை சந்தித்து வாழ்த்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், திமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர், வீடியோ ஒன்று வெளியிட்டு பதிலடி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது கோவை மாவட்ட திமுகவில் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில் மீனா ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய முகங்கள் கட்சியில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாக வரும் நிலையில், மீனா ஜெயக்குமாரும் தவெகவில் இணைய உள்ளாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
