கோவையை சேர்ந்த ஒரு மிகப்பெரும் தனியார் நிறுவனம் ஒன்று அதன் பணியாளரின் சோகமான நேரத்தில் செய்த உதவி ஒன்றை இணையதள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
விபின் பாபுராஜன் எனும் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோவையில் பணிபுரியும் தனது தங்கை பெற்ற இந்த உதவி பற்றி தன் எக்ஸ் பக்கத்தில் சுருக்கமாக பதிவு செய்துள்ளார்.
தனது சகோதரியின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் உயிரிழந்ததை அடுத்து மிகுந்த மனவருத்தத்தில் அவர் இருந்ததாகவும் விபின் கூறியுள்ளார். அப்போது தந்தையின் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து அவர் மீண்டு வரவும், குடும்பத்துடன் இருக்கவும் அவருக்கு 4 வாரங்களுக்கும் கூடுதலாக விடுமுறை வழங்கியுள்ளது. இதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது ஏற்பட்ட மருத்துவச் செலவில் 20% தொகையை அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் உச்ச நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் நேரடியாக அப்பெண்ணை தொடர்புகொண்டு ஆறுதல் கூறி, அவரது நலனையும் விசாரித்துள்ளனர். இவ்வளவு நன்மைகளை அந்த நிறுவனம் செய்துள்ளது என்பதை கூறிய விபின் அந்த நிறுவனத்தின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை.
ஆனால் அந்த நிறுவனத்தை பற்றி சிறு குறிப்புகளை மட்டும் கொடுத்துள்ளார். அதன்படி, அந்த பெண் பணிபுரிந்த நிறுவனம் கோவையில் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது என்றும், 4000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தபோதிலும், ஊழியர்களைக் குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் பண்பு அவர்களிடம் மாறவாத நிறுவனம் என கூறியுள்ளார்.
அப்படியென்றால் அந்த நிறுவனம் எதுவாக இருக்கும்?

