கோவையில் 11-ம் வகுப்பு மாணவர் அகிலன் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே, அகிலனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே மகனின் உடலைப் பெற்றுக்கொள்வது குறித்து முடிவெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என அகிலனின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், எனவேதான் சிபிசிஐடி விசாரணைக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்தனர்.
பெற்றோரின் கோரிக்கையை ஏற்றுக் காவல்துறை, மாணவர் உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது மகனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்காக அகிலனின் தந்தை, காவல்துறையினருடன் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இருப்பினும், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே மகனின் உடலைப் பெற்றுக்கொள்வது குறித்து முடிவெடுப்போம் எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அகிலனின் தாய், தனது மகனின் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், தனது மகனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அவர் சென்ற இடத்திற்குத் தானும் சென்றுவிடுவேன் எனக் கூறி வேதனையை வெளிப்படுத்தினார்.
மாணவனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
