மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநரகம், மை பாரத் – கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய ‘விக்சித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி’,  கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் துணை முதல்வர் பூங்குழலி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஷ்வரன் வரவேற்றார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். மை பாரத் கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நல அலுவலர் விக்னேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கப் பதிவு செய்த மாணவர்களில் 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுள் சிறப்பாகச் செயல்பட்ட பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஹர்ஷிதா, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவி அக்ஷய லட்சுமி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கவி பிரனீதன், என்.ஜி.எம். கல்லூரி மாணவர் சபரிகிரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி சிவரஞ்சினி ஆகிய ஐந்து பேர் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்டனர்.

மாநில அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

நடுவர்களாகப் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் நாகேஷ்வரி, நிர்மலா மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ரெஞ்சினி, குமரகுரு கல்வி நிறுவனங்களின் பொதுத்துறை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டல் மையத் தலைவர் பினு கிருஷ்ணா, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் நர்மதா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஜெயபால் ஆகியோர் செயல்பட்டனர்.