ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், பொறியியல் திறனுக்கும் அடையாளமாக திகழும் செனாப் ரயில் பாலம், உலகின் மிக உயரமான வளைவான ரயில் பாலமாக உருவெடுத்துள்ளது. இது ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கெளரி இடையே அமைந்துள்ள இந்த பாலம், நதி மேற்பரப்பிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ஈபிள் கோபுரத்தை விட 35 மீ. அதிக உயரம் கொண்டது.

மொத்தம் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பாலம், 8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 40 டன் டி.என்.டி வெடிப்பையும் தாங்கும் பாதுகாப்பு திறனும் பெற்றுள்ளது. 28,660 மெட்ரிக் டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது 120 ஆண்டுகள் வரை நீடிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை இணைப்பு இல்லாத நிலப்பரப்பில், மிகப்பெரிய இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. அதையும் மீறி, நதியின் ஓட்டத்தைப் பாதிக்காமல்,  பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியை கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் மேற்பார்வையில், ஐஐடி டெல்லி, ஐஐடி ரூர்க்கி, இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் டி.ஆர்.டி.ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன், தென்கொரியா, பின்லாந்து போன்ற நாடுகளின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கத்ரா–பனிஹால் இடையிலான ரயில்வே பாதையின் மிக முக்கியமான கட்டமாகவும், ஜம்மு–ஸ்ரீநகர் இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் இந்த பாலம் அமைந்துள்ளது. இதன் மூலம் சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி ஆகியவை மேம்படும்.

இந்த பாலத்தின் வழியாக ரயில்கள் செல்லும் போது, சாகச பயண அனுபவமாகவே இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வருவதால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.