கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள மாநகராட்சி பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பு இல்லையென பயணிகள் தரப்பில் எழுந்த குற்றச்சாட்டை ‘தி கோவை மெயில்’ சமீபத்தில் ” கோவை திருச்சி சாலை பேருந்து நிலையத்தில் உள்ள குறைகள் தீர்க்கப்படுமா?” எனும் தலைப்பில் வெளிகொண்டுவந்தது.

அதில், பேருந்து நிலையத்திற்கு கைகுழந்தைகளுடன் வரும் தாய்மார்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட பாலூட்டும் அறை கவனிப்பு இல்லாமல் இருக்கிறது, அதில் உள்ள, மின்விசிறி மற்றும் விளக்குகள் சரிவர இயங்குவது இல்லை என்பதை சுட்டிக்காட்டியது.
impacṭ2 scaled
பஸ் ஸ்டாண்டின் பின்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் பரவுகிறது என்பதையும் படங்களுடன் வெளியிட்டு, இவற்றை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை கட்டுரையாக வெளிகொண்டுவந்தது.

இந்த நிலையில் தற்போது, தாய்மார்கள் பாலூட்டும் அறை மேம்படுத்தப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் தேங்கிநின்ற கழிவு நீர் பாதை சுத்தப்படுத்தப்படுகிறது. மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை என்பதும் கவனிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது.
TRACK scaled
இந்த நடவடிக்கைகளை காணும் பேருந்து பயணிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். இதை தொடர்ச்சியாக பின்பற்றினால் இந்த வளாகத்தின் நிலை மேம்படும் எனவும் கூறுகின்றனர்.

மக்களின் எதிர்பார்ப்பு

இந்த வளாகத்தில் பேருந்திற்காக காத்திருப்பவர்கள், அங்கு மது அருந்திவிட்டு இருக்கைகளில் படுத்து உறங்கும் சில நபர்களால் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் பலரும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். எனவே அவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த வளாகத்தின் அருகே மதியம் மற்றும் மாலை நேரங்களில் போலீசார் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த முயற்சி எடுக்கவேண்டும், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவேண்டும் எனும் கோரிக்கை உள்ளது.