கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள திருச்சி சாலை பேருந்து நிறுத்தத்தில் மது போதையில் ரகளைகள் நடக்கிறது எனும் குற்றச்சாட்டு பல நாட்களாக தொடர்கிறது.
தற்போது அதே போல மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி சாலை பேருந்து நிறுத்தத்தின் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த 50 வயது ஆண் ஒருவரை மர்ம நபர்கள் இரண்டு பேர் எட்டி உதைத்து எழுப்பி, முகத்தில் அறைந்து பணத்தைப் பறித்துச் சென்றதாக சொல்லப்படும் சம்பவம் தான் அப்பகுதியில் இருந்த மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபர் பெயர் மணி. இவர் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர். நேற்று பேருந்து நிறுத்தத்தின் நடைபாதையில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை உதைத்து எழுப்பி, ஒரு அறைவிட்டு அவரிடம் இருந்த ரூ.50 யை பறித்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரத்துடன் கத்தியிருக்கிறார் மணி. அவரது சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் நின்று இருந்தவர்கள் திரண்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சிலரால் தொடர்ந்து அரங்கேற்றப்படுவதாக பிளாட்பாரவாசிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுவருகிறது. இவ்வாறு பணம் மற்றும் செல்போன்களைப் பறித்துச்செல்பவர்கள், அதை விற்று மது மற்றும் கஞ்சா வாங்கிப் போதையில் சுற்றித் திரிவதாக பேச்சு உள்ளது.
போதை ஆசாமிகளால் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சில விரும்பத்தகாத செயல்கள் நடக்கிறது என தகவல்கள் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்ற நிலவரம் என்ன என்பதை படங்களுடன் ‘தி கோவை மெயில்’ தரப்பில் வெளிகொண்டுவந்துள்ளோம்.
இப்போது இரவு நேரங்களில் நடைபாதைகளில் அயர்ந்து தூங்கும் ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் பிளாட்பாரவாசிகளைக் குறிவைத்து தாக்குதல் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு பொதுவெளியில் பேசப்பட துவங்கியுள்ளது. இனியாவது இந்த போதை கும்பலின் அத்துமீறல்கள் அடக்கப்படுமா என பார்ப்போம்.

