முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இன்று 2026-27ஆம் நிதியாண்டுக்கான தனது முதல் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
இந்த பட்ஜெட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மண்ணின் மகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில் ‘மண்ணின் மகள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
திட்டத்தின் கீழ் நிலம் வாங்குபவர்களுக்கு முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். மேலும், விவசாயம் மேற்கொள்ள நவீன தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கப்படும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘தாய் கேர்’ திட்டம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான மகப்பேறு சேவையை உறுதி செய்யும் வகையில் ‘தாய் கேர்’ சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன.
மகப்பேறு நாள் நெருங்கும் பெண்கள் இந்த மையங்களில் தங்கி, கட்டணமில்லா உணவு, மருத்துவ உதவி மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘அண்ணனின் சீர்’ திட்டம்
பெண்களின் திருமண நாளை முன்னிட்டு, 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கும் ‘அண்ணனின் சீர்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 100 சதவீத மானியத்தில் ஐந்து ஆடுகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், பால் உற்பத்தியையும் அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் தகுதியான பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று நடைமுறைக்கு வரும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கப் பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்
மகளிர் சுயஉதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மாற்றும் நோக்கில் ‘சிங்கப் பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் முதலீட்டு மானியமும் வழங்கப்படும்.
