தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவை மாநகராட்சியில் 6,616 கர்ப்பிணிகளை தொலைபேசி மூலம் கண்காணிக்கும் வகையில், ‘ஹாலிடே கால்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள், பண்டிகை விடுமுறையின்போது சொந்த ஊர்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாட்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை 5 நாட்கள் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக கோவை மாநகராட்சியில் உள்ள 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த செவிலியர்கள், கர்ப்பிணிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்காணிக்க உள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 10,092 கர்ப்பிணிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில், நவம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரை பிரசவம் எதிர்பார்க்கப்படும் 2,045 பேர், அதிக கவனம் தேவைப்படும் 2,558 பேர் மற்றும் பிப்ரவரி 2027ல் பிரசவம் எதிர்பார்க்கப்படும் அதிக கவனம் தேவைப்படும் 2,013 பேர் என மொத்தம் 6,616 பேர் இத்திட்டத்தின் கீழ் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது, கர்ப்பிணிகள் விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளனரா என்பது உறுதி செய்யப்படும். மேலும், கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
அதற்கேற்ப செவிலியர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவர். கர்ப்பகாலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவ நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவர்.
தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தொடர் அரசு விடுமுறை நாட்களிலும் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ‘ஹாலிடே கால்ஸ்’ திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
