விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு போத்தனூா்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, வெளியூரில் தங்கி பணிபுரிவோர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். இதனால் ரயில், பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இதனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், விநாயகர் சதுா்த்தியை முன்னிட்டு போத்தனூர்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 11) சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து  இரவு 11.50 மணிக்கு புறப்படும் சென்னை-போத்தனூர் சிறப்பு ரயில் (எண்: 06023) மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூர் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கமாக செப்டம்பா் 14ம் தேதி போத்தனூரில் இருந்து  இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.