கோவை மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘நிழல்’ என்ற நவீனப் பாதுகாப்புத் திட்டம் மாநகர காவல் துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இதனை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தங்களது மொபைல் கேமரா வழியாக ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், காவல் துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும். மிக முக்கிய அம்சமாக, தகவல் அளிப்பவர்களின் அடையாளம் முழுமையாக ரகசியமாக இருக்கும்.

nizhal qr code

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

அங்குப் பணியாற்றும் காவல் அதிகாரிகள், தகவல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பித் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் மாவட்ட காவல்துறை சார்பில் கியூஆர் குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளன.