சிறுவாணி அணை தொடர்பான பிரச்சனை என்பது வெறும் கோவை மாநகராட்சியின் 44வது வார்டு பிரச்னை அல்ல, அதை தாண்டி கோவை மாநகரத்தின் 20க்கும் மேற்பட்ட வார்டுகள் தொடர்புடைய பிரச்சனை என்பதால் இதைப் பற்றி விரைவில் மேயர் தலைமையில் விவாதம் நடத்தப்படவேண்டும் என கோவை மாநகராட்சி 44வது வார்டு கவுன்சிலர் காயத்ரி வலியுறுத்தி உள்ளார்.
இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. 2 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க கோவை மேயர் ரங்கநாயகியால் தடைசெய்யப்பட்ட அவர், தனது வார்டில் உள்ள பொது பிரச்சனைகள் பற்றி பேச மேயரை தொலைபேசியில் அழைத்தாலும் பேசுவதில்லை என கூறி இன்று கூட்டம் நடைபெற்ற வளாகம் வெளியே தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அவர் சிறுவாணி குடிநீர் விநியோக பிரச்சனை பற்றி புகைப்படங்களுடன் செய்தியாளர்களிடம் அந்த சிக்கல் பற்றி விவரித்தார்.
என்ன பிரச்சனை சிறுவாணியில்?
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1984ல் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த சிறுவாணி அணை இப்போது வரை தூர் வாரப்படாமல் உள்ளது. அணையில் 44.6 அடி வரை நீர்தேக்கலாம் என்ற நிலைமை இருக்க, சில பழுதுகள் காரணமாக நீர் கசிவு அணையில் ஏற்பட்டுவருகிறது.
இதை சரிசெய்யவும், நீர் கசிவை நிறுத்தவும் தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர், கேரள அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த பணியில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் நிபுணர் குழுவையும் இணைத்துள்ளனர். ஆனால் எப்போது அணை தூர் வாரப்படும் என்பது பற்றி தெளிவான ஒரு பதில் இல்லை.
இதை சரி செய்ய ரூ.18 கோடி ஆகும் எனவும், சரி செய்யாமல் விடும் ஒவ்வொரு நாளும் 1 கோடி லிட்டர் நீர் வீணாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக எழுந்த பிரச்சனை!
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 44-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுவாணி குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக காயத்ரி கூறினார்.
இதுகுறித்து குடிநீர் விநியோக அதிகாரிகளிடம் அவர் கேட்டபோது, சிறுவாணி அணையில் அடிமட்டத்தில் அதிகளவு சேறு படிந்துள்ளதால் நீரேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் அணைக்குள் வந்த தண்ணீர் அடிமட்டச் சேற்றுடன் கலந்து அடர்த்தியாக மாறியுள்ளதாகவும், இந்நீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சினால் இயந்திரங்கள் பழுதடையும் அபாயம் உள்ளதால் நீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
“இதை தீர்த்து வைக்க பல வழிகள் உள்ளன. அணையில் உள்ள சேற்றை நவீன ‘டிரெட்ஜிங்’ தொழில்நுட்பம் மற்றும் டவர் லைன் மூலம் அப்புறப்படுத்தி, மலைக்கு பின்புறம் உள்ள குளங்களுக்குத் திருப்பிவிட்டால், கோடை காலத்தில் இக்குளங்களில் நீர் வற்றும்போது அடியில் படியும் வண்டல் மண் விவசாயத்திற்கும், மண்பானை மற்றும் செங்கல் தயாரிப்புக்கும் பெரிதும் பயப்படுத்திக்கொள்ளலாம். இது எனக்கு தெரிந்தது.”
“இதுபோல பல தீர்வுகளை கூடி பேசினால் தானே பெறமுடியும். சிறுவாணி அணையின் இந்த பிரச்சனை, எனது 44வது வார்டை மட்டும் பாதிக்கும் விவகாரம் அல்ல. கோவை மாநகராட்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வார்டுகள் சிறுவாணி குடிநீரையே முழுமையாக நம்பியுள்ளன. அணையில் உள்ள சேற்றை உடனடியாகத் தூர்வாராவிட்டால், வரும் நாட்களில் மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும்”.
16,000த்திற்கும் மேற்பட்ட மக்களின் பிரதிநிதியான எனக்கு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி விவாதிக்க அனுமதி தரவேண்டும் என அவர் கூறியதுடன் சிறுவாணி அணை பிரச்சனை பற்றி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
