ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு பூ மற்றும் காய்கறி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். கோவையிலிருந்து இந்த ஆண்டு ஓணம் பண்டிகை முன்னிட்டு மத்திய கிழக்கு நகரமான ஷார்ஜாவிற்கு 10 டன் எடையிலான பூ மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் அரேபியா நிறுவனம் மூலம் கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை 5 நாட்கள் நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி திங்கட்கிழமை வரை 5 நாட்களில் மொத்தம் 10 டன் எடையிலான பூக்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள் அதிகளவு பூக்களுடன் சேர்ந்து புக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

அதே போல் ஒவ்வொரு முறையும் 170 புறப்பாடு மற்றும் 150 வருகை என 5 நாட்களில் 1,600 பேர் பயணம் மேற்கொண்டனர்.

வழக்கமாக அதிக எடையில் பூக்கள் புக்கிங் செய்யப்படும். ஆனால் இந்த முறை பயணிகள் உடைமைகள் அதிகமாக இருந்த காரணத்தால் சரக்கு ஏற்றிச் செல்லும் அளவு குறைக்கப்பட்டது. பயணிகள் தாங்களே பூக்களை அதிக அளவு கொண்டு சென்றனர். ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் ஷார்ஜாவில் கொண்டாடப்பட்டது.

இவ்வாறு விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.