12 ஆண்டு காலமாக ஆனைகட்டி – கொண்டனூர் கிராமத்தின் முக்கிய தடுப்பணையை தூர்வார பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இப்போது அதற்கான பணிகள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தலையீட்டுக்கு பின்னர் துவங்கியுள்ளதால், ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 24 வீரபாண்டி ஊராட்சியில் உள்ள இந்த தடுப்பணை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாததால், இந்த தடுப்பணையில் அதிகளவில் வண்டல் மண் தேங்கி, அதன் நீர்த்தேக்க திறன் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், விவசாயம், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கான நீர் தேவையும் பாதிக்கப்பட்டது.
தடுப்பணை தூர்வாரப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கும் நீர் ஆதாரம் கிடைக்கும் என்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதை தொடர்ந்து, தூர் வார தேவையான நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க பணிகள் வியாழன் அன்று ஆரம்பமாகின. இந்நிகழ்வில் ஊர் மக்களுடன் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

