கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குடிநீரில் முறையாகவும் சுத்தமானதாகவும் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் தெரிவித்துள்ளார்.

வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதுபிப்பு பணிகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: கோவை பிரதான ரயில் நிலைய சந்திப்பின் இருபுறமும் சாலைகள் அமைந்துள்ளதால் நில பற்றாக்குறை காரணமாக அங்கே விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. எனவே வடகோவை, சிங்காநல்லூர், பீளமேடு போன்ற துணை ரயில் நிலையங்களை மேம்படுத்துவதே சரியான தீர்வாக அமையும்.

கோவையில் தொடங்கி கோவையிலேயே முடிவடையும் ரயில்களை வடகோவை ரயில் நிலையத்திலிருந்து இயக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக வடகோவை ரயில் நிலையத்தில் இயங்கி வரும் கூட்ஸ் ஷெட்டை விரைவாக இருகூர் ரயில் நிலையத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தை முழுமையாகப் பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

10.b scaled

மேட்டுப்பாளையம் அணுகு சாலையிலிருந்து பயணிகள், வடகோவை ரயில் நிலையத்திற்கு எளிதாக வந்து செல்லும் வகையில் புதிய வழிப்பாதை அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

போத்தனூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் குறித்துப் பேசிய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், போத்தனூர் ரயில் நிலையத்தை ரூ.50 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் முழுமையாக முடிவடையும்.

ரயில் நிலையங்களில் குடிநீர் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பேசிய அவர், குடிநீர் விநியோகத்தில் எழுந்த சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது குடிநீரில் முறையாகக் குளோரினேஷன் செய்யப்பட்டுச் சுத்தமான நீர் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சிஏஜி சுட்டிக்காட்டியுள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகத் தேவைப்படின் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.