எதிர்கால தலைமுறைக்காக மகிழ்ச்சியான, விழிப்புணர்வான, பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என ருமேனியா நாட்டில் நடைபெற்ற ‘அன்டோல்ட்’ சர்வதேச இசை விழாவில் சத்குரு பேசினார்.
ருமேனியாவில் உள்ள நபோகா நகரில் ஒவ்வொரு ஆண்டும் ‘அன்டோல்ட்’ சர்வதேச இசை விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஆகஸ்ட் 6 முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சத்குரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

சத்குரு பேசுகையில், இந்த இசைத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல. நீங்கள் இங்கே ஒரே மனிதகுலமாக, ஒரு சாத்தியமாக ஒன்றிணைந்திருக்கிறீர்கள். நம்முடைய இந்த வாழ்க்கைக்காகவும், இந்த பூமியில் இனி வாழப்போகும் தலைமுறைகளுக்காகவும், மகிழ்ச்சியான, விழிப்புணர்வான, பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம். நாம் இதை நிகழச் செய்வோம் என்று கூறினார்.
சத்குருவின் ‘கான்ஷியஸ் மியூசிக் சர்க்கிள்’ அமைப்பு, மக்களின் மனநலனை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்குவதற்காக ‘அன்டோல்ட்’ இசை விழாவுடன் இணைந்துள்ளது.
இது குறித்து அன்டோல்ட் யூனிவர்ஸின் நிறுவனர் போக்டன் புடா கூறுகையில், உலகின் மிகப்பெரிய இசைத் திருவிழாக்களில் ஒன்றை உருவாக்குவதை விடப் பெரிய கனவு ஒன்று எங்களுக்கு எப்போதும் உண்டு. இசை என்பது மக்களை இணைப்பதற்கும், நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான ஒரு சக்தியாக விளங்கும் உலகை உருவாக்குவதுதான் எங்களது நோக்கம் எனக் கூறினார்.
