இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் (ஜியோ/GIO) சார்பில் “பெண்மையைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகஸ்ட் மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலச் செயலாளர் நுஹா மரியம், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமீம், கோவை மாநகரச் செயலாளர் ஷஹ்னாஸ் செய்யது மற்றும் இணைச் செயலாளர் ருபானா ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தின் நோக்கங்கள் மற்றும் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினர்.
அப்போது பேசிய அவர்கள் மாணவிகளின் கல்வி வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்லொழுக்கம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு செயல்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெண்கள் மீது தீவிரமான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது பெண்மையின் இயல்பை இழந்து செயல்படுவது என இரு வேறு தீவிர நிலைகளுக்கு மாற்றாக, பெண்கள் தங்களது இயல்பான பெண்மையைப் போற்றி, சுயமரியாதையுடனும் சமநிலையுடனும் வாழ ஊக்கப்படுத்துவதே “பெண்மையைப் போற்றுவோம்” பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கருத்தரங்குகள், விழிப்புணர்வு வகுப்புகள், கலைக் கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இணையவழி கலந்துரையாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பெண்களின் தனித்துவம், சுயமரியாதை, கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

