பலருக்கும் “சுஜாதா” என்ற பெயரை கேட்டால் மறைந்த எழுத்தாளர், திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவின் முகம் நினைவுக்கு வரும். சிலருக்கு பிரபல பாடகி சுஜாதா மோகன் நினைவுக்கு வரலாம்.
அதுவே 80களில் கோவையில் வசித்த பலரிடம் இப்பெயரை சொன்னால், ‘சுஜாதா மொபெட்’ எனும் 2 சக்கர வாகனம் பற்றியும் பல விஷயங்களை பகிறுவார்கள். ஏனென்றால் இது கோவையில் இருந்து உருவாக்கப்பட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் ரசிகர்களை கொண்ட ஒரு வாகனம் என்பதால் தான்.
இதுகுறித்த ஒரு பகிர்வை சமீபத்தில் முகநூலில் பதிவிட்டுள்ளார், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி அன்பரசன். 80 களில் வெளிவந்த செய்தி விளம்பரம் ஒன்றை அவர் தனது பதிவுடன் இணைத்துள்ளார்.
கோவையில் அன்றைய காலகட்டத்தில் ‘விஜயலக்ஷ்மி என்ஜினீரிங்ஸ்’ எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ‘சுஜாதா கம்பர்ட்’ எனும் ஸ்கூட்டர் வகை வாகனம். அந்த விளம்பரத்தில் வெறும் 1 லிட்டர் பெட்ரோலில் 60 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது என குறிப்பிடப்பட்டது.
அந்த பழைய விளம்பரத்தில் இந்த வாகனத்தின் விலை ரூ.2,875/- என குறிப்பிட்டிருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்ததது. ஏனென்றால் அப்போது இருந்த பிரபல பெரும் நிறுவன மொபெட் ஸ்கூட்டர் வகை வாகனங்களே ரூ.3500-5000 இருந்துள்ளன.

இதுகுறித்து அன்பரசன் தனது பதிவில் மேலும் கூறியது :
1980-களில், அன்றைய கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்ஸ், வி.எல்.பி. குழுமம் (இன்றைய கிருஷ்ணா கல்லூரிகளின் குழுமத்திற்கு சொந்தமானதுதான் இது). அதே போல் கோவை சாய்பாபா காலணி பகுதியில் மிக குறைந்த விலையில் ப்ளாஸ்டிக் கார் ஒன்றையும் தயாரித்தார்கள். இன்றைய டாட்டாவின் நானோ காருக்கே முன்னோடிகள் அவர்கள்.
“என்ன நம்மாளுகளுக்கு கார்பரேட் அரசியல் தெரியல. பெரிய கம்பெனிகள் இவர்களை முடித்து கட்டிவிட்டார்கள் என்பதே உண்மை.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

