ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘யூத் டாக் தமிழ்நாடு 2026’ இளம் தலைவர்கள் உச்சிமாநாடு மற்றும் இறுதிப்போட்டி நடைபெற்றது.
ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடந்த இந்நிகழ்ச்சியை ஐசிடி அகாடமி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து நடத்தியது.
தமிழகத்தின் 425 கல்லூரிகளில் இருந்து 28,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 67 கல்லூரிகளைச் சேர்ந்த 3,100 மாணவர்கள், 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பல்வேறு மண்டல போட்டிகளில் வெற்றி பெற்ற எட்டு மாணவர்கள் இறுதிச்சுற்றில் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் தொழில்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு தலைமைத்துவம், தொழில் வளர்ச்சி, இலக்கு நிர்ணயம் குறித்து உரையாற்றினர்.
நிறைவு விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் ‘வெற்றி தமிழ்நாடு ஏஐ கமாண்ட் சென்டர்’ அமைக்கப்படும் என அறிவித்தார்.
ரத்தினம் பல்கலைக்கழகம் வேந்தர் மதன் ஏ. செந்தில் தலைமை உரையாற்றினார். ஐசிடி அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் தொடக்க உரை வழங்கினார். ரத்தினம் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மாணிக்கம் பங்கேற்றார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுசீந்திரன், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் சிவகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், அர்ஜுன் தாஸ் ஆகியோருக்கு ‘செலிபிரிட்டி யூத் ஐகான்ஸ் 2026’ விருது வழங்கப்பட்டது.
போட்டியில் கோவையைச் சேர்ந்த அஸ்விதா முதலிடம் பெற்று ‘யூத் ஐகான் 2026’ பட்டத்தை வென்றார். வேதாந்த் பெர்வானி இரண்டாமிடமும், மதுரையைச் சேர்ந்த அஸ்மா ஜைத்தூன் மூன்றாமிடமும் பெற்றனர்.
