கோவை மருதமலை கோவிலுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மலைப் பாதையில் செல்ல அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் கோவில் வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாகத்தினை முன்னிட்டு மலைக்கோவிலுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படி வழியாகவும், கோவிலின் பேருந்து மற்றும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று தரிசனம் செய்யலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.