ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மெமரி தொடர்பான பாகங்களின் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், ‘ரேம்’ எனப்படும் பாகத்தின் விலை உயர்ந்துள்ளது.

சாமானியர்கள் பயன்படுத்தும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் மொத்த உற்பத்திச் செலவில், மெமரி சிப்களுக்கான செலவு மட்டுமே 60 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தரமான கேமரா, பேட்டரி மற்றும் மெமரி வசதிகளுடன் முன்பு ரூ.15,000-க்கு கிடைத்த ஸ்மார்ட்போன்களை, தற்போது அதே விலைக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போன்களின் விலை தற்போது ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை உயர்ந்துள்ளது.

இதனால், இந்த ஆண்டு ஸ்மார்ட்போனை அப்கிரேடு செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் வசதிகளுடன் கூடிய புதிய போனை வாங்குவதற்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கூடுதலாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில், குறிப்பாகத் தீபாவளியின்போது, சாமானியர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவது குறையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியச் சந்தையில் ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை ரூ.14,000 ஆக இருந்தது. ஆனால், தற்போது அந்த விலை ரூ.30,000-ஐ நெருங்குவதாக ஸ்மார்ட்போன் விற்பனை தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சந்தையில் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கும் மெமரி சிப்களின் விலை உயர்வு அடுத்த சில ஆண்டுகளுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது சந்தையில் நிலவும் விலை நிலவரமே வரும் ஆண்டுகளிலும் புதிய இயல்பாக மாறக்கூடும்.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு நிலவி வரும் சூழலில், பணத்தைத் திட்டமிட்டுச் செலவிட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய மோதல்கள் மீண்டும் எரிபொருள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலகின் தென்பகுதி நாடுகள் கடுமையான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஸ்மார்ட்போன் மீதான மோகத்தால், இ.எம்.ஐ வசதி இருக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு வாங்கும் முடிவை எடுக்காமல், நிதிநிலையை மதிப்பிட்டு கவனமாகச் செயல்படுவது அவசியம். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, திட்டமிட்டுச் செலவிடுவதே இந்தப் பண்டிகைக் காலத்தை தித்திப்பாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!