விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலங்களை முன்னிட்டு, கோவை மாநகரில் புதன்கிழமை (செப்டம்பர் 16) போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம், பாலக்காடு சாலை வழியாகச் சென்று குனியமுத்தூர் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. இதேபோல், போத்தனூர் சாரதா மில் சாலையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஊர்வலம், சங்கம வீதி, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து குறிச்சி குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி, காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்களுக்கு பின்வரும் மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள்: எல்&டி புறவழிச் சாலை, ஈச்சனாரி அணுகுசாலை வழியாக வந்து, விநாயகர் கோயில் முன்பாக யு-டர்ன் செய்து செட்டிபாளையம் சாலை, ஜி.டி. டேங்க், ரயில் கல்யாண மண்டப சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் அல்லது குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடத்தை அடைய வேண்டும்.
இலகுரக வாகனங்கள்: ஈச்சனாரி எல்ஐசி காலனி சந்திப்பு, தக்காளி மார்க்கெட் வழியாக வலதுபுறம் திரும்பி சாரதா மில் சாலை, போத்தனூர் கடைவீதி வழியாக உக்கடம் செல்லலாம்.
மதுக்கரை மார்க்கெட் சாலையில் இருந்து வரும் பேருந்துகள்: காமராஜபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி எல்ஐசி காலனி சந்திப்பு, ஈச்சனாரி சாலை, செட்டிபாளையம் சாலை வழியாக உக்கடத்தை அடைய வேண்டும். இலகுரக வாகனங்கள் தக்காளி மார்க்கெட், சாரதா மில் சாலை வழியாகச் செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள், ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் சாலை, ஜி.டி. டேங்க், ஈச்சனாரி வழியாக பொள்ளாச்சி சாலையை அடைய வேண்டும்.
உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கிச் செல்லும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள், உக்கடம் பெரிய ரவுண்டானாவில் திரும்பி பேரூர் புறவழிச்சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாகால்வாய், புட்டுவிக்கி சாலை, ஆசிரமம் பள்ளி சந்திப்பு, கோவைப்புதூர் வழியாக பாலக்காடு சாலையை அடையலாம்.
பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், கோவைப்புதூர் பிரிவில் இடதுபுறம் திரும்பி கோவைப்புதூர், ஆசிரமம் பள்ளி சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, சேத்துமாகால்வாய், அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு வழியாக உக்கடத்தை அடைய வேண்டும்.
விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலங்களை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
