ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசி, கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

சிறப்பு விருந்தினராக ஐபிஎம், ஐஎஸ்ஏ தொழில்நுட்ப நிபுணர் ஆய்வகங்களின் இந்திய மேலாளர் ஜெகதிஷா பட் கலந்து கொண்டு, முதுநிலை மற்றும் இளநிலை கம்ப்யூட்டிங் மற்றும் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் மற்றும் ஒவ்வொரு துறைகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள், பதக்கங்கள் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது: இந்த கல்லூரியில் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் ஏஐ போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை முறையாகக் கற்று சிறந்த தொழில்முனைவோர்களாக வளர வேண்டும். இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்வது உங்கள் திறமையான மற்றும் பொறுப்பான கரங்களில்தான் உள்ளது. உங்கள் பயணம் புதுமை, விடாமுயற்சி மற்றும் உயர்ந்த லட்சியத்தால் நிரம்பியதாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தொிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் 1,696 இளநிலை மற்றும் 352 முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மொத்தம் 2,048 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.