குழந்தைகள் கார்ட்டூன், காமிக்ஸ் பார்க்கும் காலம் மாறி இன்று ‘கன்டென்ட்’, ‘ரீல்ஸ்’, ‘ஷார்ட்ஸ்’, ‘ஸ்நாப்ஸ்’ என சமூக வலைதள காணொளிகளுக்குள் பாயும் காலம் உருவாகி உள்ளது.
“என் பிரென்ட் அனுப்பிய ஒரு ரீல்ஸ் பாக்கலாம்னு தாங்க இன்ஸ்டாகிராம் உள்ள போனேன், அப்படியே ஒரு 5 நிமிஷம், 10 நிமிஷம்னு அரைமணி நேரம் போயிடுச்சு,” என பெரியவர்களே சொல்லும் போது சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் விரிக்கும் வலையில் சிக்காமலா இருப்பார்கள்?
இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த அமெரிக்காவின் 47 மாநில நிர்வாகங்கள், பிரபல சமூக வலைதள பெருங்குழுமமான மெட்டா மீது பல்வேறு வழக்குகளை பதிந்து நீதிமன்றத்தில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வாதாடி வெற்றி கண்டுள்ளன.
இதில் சிறப்பு என்னவென்றால், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ் புக் ஆகிய சமூக வலைத்தளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா இந்த வழக்கில் ரூ.1.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பீடு கட்ட ஒத்துக்கொண்டுள்ளது. அதுமட்டுமில்லை, இனி சிறுவர்கள் தனது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்கவும் மெட்டா முடிவு செய்துள்ளது.
என்ன இதன் பின்னணி? விளக்கமாக பார்க்கலாம்…
ஃபேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள், குழந்தைகள் மற்றும் 13-19 வயது வரை உள்ள ‘டீனேஜ்’ சிறுவர்கள் தொடர்ந்து தங்கள் செயலிகளிலேயே மூழ்கடித்து வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அமெரிக்காவில் 36% சிறுவர்கள் யூடியூப், டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் ஆகிய செயலிகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து இடைவெளியின்றி பயன்படுத்துவதாக டிசம்பர் 2025 பியூ ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது.
மெட்டா போன்ற பெரும் தொழில்நுட்ப வலிமை கொண்ட நிறுவனங்களின் ‘அல்காரிதம்’ சிறுவர்களை புரிந்துகொண்டு ஒரு பதிவை அவர்கள் பார்க்க துவங்கினால், அதன் பின்னர் அவர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக வரக்கூடிய பதிவுகள், புகைப்படங்கள், ரீல்ஸ் (சிறு காணொளிகள்) மற்றும் பரிந்துரைகள் சிறுவர்களை சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகிவிடுவதாகவும் குற்றச்சாட்டு அமெரிக்காவின் 47 மாநில பிரதிநிதிகளால் நீதிமன்றம் முன்வைக்கப்பட்டது.
மேலும் மெட்டா நிறுவனம் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து முறையற்ற முறையில் தரவுகளை சேகரித்ததாகவும், குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகலாம் என தெரிந்தும் மெட்டா செயல்பட்டதாக அந்த பிரதிநிதிகள் குற்றம்சாட்டின. இந்த விசாரணையில் மெட்டாவிற்கு நீதிமன்றத்தில் நல்ல குட்டு விழுந்துள்ளது.
இதை தொடர்ந்து தன்னால் ஏற்பட்ட பாதிப்பை ஏற்று அதை சரிசெய்யும் நடவடிக்கைகளுக்கு உதவ இந்த வழக்கின் இழப்பீட்டுத் தொகையாக ரூ.1.7 லட்சம் கோடி 47 மாநிலங்கள் மற்றும் அமெரிக்கப் பகுதிகளுக்குப் பிரித்து வழங்க மெட்டா ஒப்புக்கொண்டது.
இந்தத் தொகையானது இளைஞர்களின் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள், மனநலத் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இத்துடன் மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் 13 முதல் 17 வயதுடைய சிறுவர்களின் பயன்பாட்டில் பல முக்கியமான மாற்றங்களைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, ஒருவர் காணும் ‘கண்டன்ட்’ (பதிவுகள்), படங்களை வைத்தே அவர்கள் சிறுவர்களா இல்லையா என்பதை அறிந்துகொண்டு நடவடிக்கைகள் அரங்கேறும்.
சிறுவர்கள் தினசரி 2 மணி நேரம் மட்டுமே தான் பயன்படுத்த முடியும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இந்த சமூக வலைத்தளங்களின் செயலிகளின் பயன்பாடு முற்றிலும் முடக்கப்படும். தானாகவே வீடியோக்கள் ஓடும் வசதி நிறுத்தப்படும் .
மேலும், பள்ளி நேரமான காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நோட்டிஃபிகேஷன்கள் வராமல் மியூட் செய்யப்படும். செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களை வெளியேறத் தூண்டும் எச்சரிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும், 60 மற்றும் 90 நிமிடங்களிலும் திரையில் தோன்றும் வகையில் அமைக்கப்படும்.
இவற்றுடன் சேர்த்து, அல்காரிதம் பரிந்துரைகள் இல்லாத பதிவு தொகுப்புகளை தேர்ந்தெடுக்கும் வசதி சேர்க்கப்படும். தோற்றத்தை மாற்றும் மேக்கப் பில்டர்களுக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகின்றன. (இந்த நடவடிக்கைகள் இப்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் செல்லுபடி ஆகும் எனக் தகவல்கள் தெரிவிக்கின்றன.)
குழந்தைகள் மன நலனை காக்க தன்னை மட்டும் இப்படி கட்டுப்படுத்த சொல்வதை விட யூடியூப், டிக் டாக் போன்ற பிற நிறுவனங்களை தன்னுடன் இணைந்து இந்த விஷயத்தில் பணியாற்ற வேண்டும் என மெட்டா அழைத்துள்ளது.

அமெரிக்காவில் இப்படி ஒரு மாற்றம் நிகழ உள்ளது. ஆனால் உலகில் இன்று அதிக அளவில் இளைஞர்களை கொண்ட இந்தியாவில் இந்த மாற்றம் வரப்போவது இப்போதைக்கு இல்லை என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
