கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியின் மாணவர் சங்கம் சார்பில் ரத்த ஸ்டெம் செல் தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று வியாழனன்று நடைபெற்றது.

இதில் அமெரிக்காவில் மெட்அவேர் என்.சி. (MedawareNC) எனும் ரத்த ஸ்டெம் செல் தானவிழிப்புணர்வு ஏற்படுத்தும் லாப நோக்கமில்லா தன்னார்வ அமைப்பை உருவாக்கிய 9ம் வகுப்பு மாணவர் கோகுல் கேஷவ், அவரின் தங்கை ஸ்ருதி கேசவ் மற்றும் சென்னையை சேர்ந்த டாத்ரி அமைப்பை சேர்ந்த திலீப் ஆகியோர் பங்கேற்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் இதுகுறித்து பேசினர்.

“அமெரிக்காவில் எனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் சிறுமி உற்சாகமாக ஓடி விளையாடி வந்த ஒரு நபர். அவருக்கு திடீரென ரத்த புற்றுநோய் ஏற்பட்டுவிட்டதால், அப்படியே முடங்கிப்போனார். அப்போது அவருக்கு உகந்த ரத்த ஸ்டெம் செல் தானம் கிடைத்தால் அவரை இதிலிருந்து குணப்படுத்தமுடியும் என்பதை தெரிந்து அதற்காக எங்களின் மெட்அவேர் என்.சி. மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களிடம் மேற்கொண்டோம்,” என்றார் கோகுல்.

தனது தங்கை, தன்னார்வலர்கள் மற்றும் அமெரிக்காவின் தேசிய எலும்பு மஜ்ஜை தான இயக்கத்துடன் சேர்ந்து எடுத்த முயற்சியின் விளைவாக இன்று அந்த சிறுமியின் உயிரை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் காப்பாற்ற காரணமாக இருந்துள்ளார் கோகுல்.

Harrenhal scaled

“ரத்த புற்றுநோய், தலசீமியா, சிக்கில் செல் என்பது போன்ற பல்வேறு ரத்தம் சார்ந்த நோய்களுக்கு ரத்த ஸ்டெம் செல் தானம் சிறந்த & ஒரே தீர்வாக உள்ளது. கோவை போன்ற சமூகத்தில் வாழும் ஒருவருக்கு இதுபோன்ற நோய் ஏற்பட்டால் அதற்கு உகந்த ரத்த ஸ்டெம் செல் கொடையாளர் கிடைப்பது சாத்தியமாக வாய்ப்பு அதிகரிக்கவேண்டும் என்றால் முதலில் இங்கு அதற்கான கொடையாளர்கள் அதிக அளவில் பதிவு செய்யவேண்டும்,” என்கிறார் கோகுல் கேஷவ்.

இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிக குறைவாக காணப்படுகிறது. உலக அளவில் வளர்ந்த நாடுகளில் கூட விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. ரத்த ஸ்டெம் செல் தானத்திற்கு பொருந்தும் நபர் நமது சமுதாயத்தில்/நாட்டில் கிடைக்காவிட்டால், பிற நாடுகளில் கிடைக்கும் வாய்ப்பு சவாலானது. எனவே அதிகப்படியானோர் முன்வரவேண்டும் என்கிறார் கோகுல்.

Gaiko scaled

திலீப் பேசுகையில், டாத்ரி அமைப்பு மூலம் கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக இதுவரை 6.4 லட்சத்திற்கும் மேலான ஸ்டெம் செல் கொடையாளர்களை கண்டறிந்து, அவர்களை பதிவேட்டில் பதிந்துள்ளோம் என கூறினார்.

ஸ்டெம் செல் தானம் என்பதை 18-50 வயதுக்கு உட்படவர்கள் தான் செய்யமுடியும். இதற்கு தேர்வாக முதலில் மிக எளிமையான சோதனை நடைபெறும். அதன் பின்னர் அந்த நபரின் விவரம் பதிவேட்டில் (Registry) சேர்க்கப்படும். பின்னர் அவருக்கு ஒத்துப்போகும் நபர்கள் எவரேனும் ரத்த வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு உதவ அழைக்கப்படுவார்.அவர் விரும்பினால்

அவரின் ரத்த ஸ்டெம் செல்கள் வலி இல்லாத நடைமுறை (Peripheral Blood Stem Cell) மூலம் பெற நடவடிக்கை துவங்கும்.

Hidingdem scaled

140 கோடி பேர் கொண்ட நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சம் பேருக்கும் மேல் ரத்தம் தொடர்பான வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் ஒரே நம்பிக்கை ஸ்டெம் செல் தானம் தான். இன்று வரை இந்தியாவின் தேவைக்கான அளவில் வெறும் 2% க்கும் குறைவாக தான் கொடையாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

எனவே பொதுமக்களிடம் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்கிறார் திலீப்.

“நாங்கள் எங்களின் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட பின் அமெரிக்காவில் இருந்து கோவை வந்து இங்கு சுமார் 3000 பேரிடம் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இப்போது பி.எஸ்.ஜி. கல்லூரியில் 1000 மாணவர்களிடம் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். தொடர்ந்து வரும் நாட்களில் இதை மேலும் பலரிடமும் முன்னெடுக்க உள்ளோம்,” என்கின்றனர் கோகுல் மற்றும் சுருதி கேசவ்.