சுகாதாரமில்லாத முறையில் டாட்டூ போட்டுக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதை எத்தனையோ முறை அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மக்கள் பலரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் வட மாநிலங்களில் இருந்து வேலைதேடி இங்கு வரும் இளைஞர்கள் போன்ற எளியமக்கள் அதிகமானோரிடம் இதுபோல
சுகாதாரமில்லாத முறையில் டாட்டூ போட்டுக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி விளக்கவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர். இவர்களில் மிகவும் எளிய பின்புலத்தில் இருந்து வருபவர்களை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையோர டாட்டூ கடைகள் கவர்ந்துவிடுகின்றன. மேலும் குறைந்த விலைக்கு டாட்டூ போட்டுகொள்ளலலாம் என்பதாலும் இதுபோன்ற கடைகள் சிலரின் தேர்வாக உள்ளது.
இப்படிப்பட்ட டாட்டூ கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய ஊசிகள் மீண்டும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் திறந்த வெளியில் அமர்ந்து டாட்டூ போடுவதால் தூசி, குப்பை உடலில் படும்போது அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும். மலிவான விலைக்கு டாட்டூ கிடைத்தால், மலிவான மை/சாயம் தானே பயன்படுத்தப்படும் என்பதை வாடிக்கையாளர்கள் உணருவது இல்லை.
“ஒருவரின் உடலில் டாட்டூ போட ஒரு கிண்ணத்தில் மையை கலந்து அதை ஊசி மூலம் அவரின் சருமத்தில் தொட்டு தொட்டு போட்டு முடித்தபின்னர், அதே கிண்ணத்தில் இருந்த மையை மற்ற நபருக்கு போட்டாலும் ஆபத்து தான் என்கிறார்,” கோவையை சேர்ந்த டாட்டூ நிபுணர் திவ்யா.
“டாட்டூ போடுவதற்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட பகுதியை முறையாக சுத்தம் செய்யவேண்டும். முறையாக அங்கு ஷேவ் செய்யவேண்டும், அவ்வாறு ஒருவருக்கு பயன்படுத்திய ரேசரை மற்றொருவருக்கு பயன்படுத்த கூடாது. டாட்டூ போடுபவர் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும், கையுறை அணியவேண்டும், அதை ஒருமுறை பயன்படுத்திவிட்ட பின்னர் மீண்டும் உபயோகிக்கக்கூடாது. மிக முக்கியமாக மையை பயன்படுத்தும் கிண்ணம், ஊசி ஆகியவை ஒருமுறை பயன்படுத்திய பின்னர் முறையாக அகற்றிடவேண்டும்,” என்கிறார்.
இவை எல்லாவற்றிற்கும் முதலில் முறையான பயிற்சி வேண்டும். அது இல்லாமல், சரியான வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் டாட்டூ போடுவது ஆபத்தில் போய் தான் முடியும்.
