நீலாம்பூர் பகுதியில் இயங்கும் ராயல் கேர் உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனை சார்பில் கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான (ஆண்/பெண்) கழிவறை, பிரத்தியேக கை கழுவும் இடம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் சி.எஸ்.ஆர். பண்ட் எனப்படும் சமூக பொறுப்பு நிதி மூலம் புதுப்பிக்கப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகர் பேசுகையில்:, மாணவிகள் பயனடையும் விதத்தில் ஒரு தரமான கழிப்பட வசதி இல்லையே என எண்ணிக்கொண்டிருந்த போது ராயல் கேர் நிர்வாகத்தை அணுகினோம். உடனடியாக இதற்கான உதவிகளை செய்தனர். ஒரு விமான நிலையத்தில் கழிப்பிடம் எவ்வளவு தரமானதாக இருக்குமோ அந்த அளவுக்கு நவீன வசதிகளுடன் எங்களுக்கு இந்த கழிப்பிட வசதியை ராயல் கேர் வழங்கியுள்ளது. அதற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் என பேசினார்.
மாணவிகள் பலரும் டாக்டர் மாதேஸ்வரன் மற்றும் ராயல் கேர் மருத்துவமனைக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

மருத்துவர் மட்டுமல்ல ஒரு விவசாயியும் கூட…
டாக்டர் மாதேஸ்வரன் மேற்கு தமிழகத்தின் முன்னணி மருத்துவத்துறை தலைவர்களில் ஒருவராக விளங்கிவருகிறார். இதை தாண்டி அவர் சிறுவயது முதலே விவசாயத்தின் மீது மிகப்பெரிய நேசம் கொண்டவர்.
“அடிப்படையில் நான் ஒரு விவசாயி. என்னை மருத்துவர் என்று அழைப்பதைவிட விவசாயி என்று அழைத்தால் பெருமையாக இருக்கும். சிறு வயதிலிருந்தே மரங்கள், செடிகள் மீது எனக்கு மிகுந்த ஆர்வம். எந்த விதை கிடைத்தாலும் அதை வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பேன்,” என அவர் 2023ல் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் பெருமையுடன் கூறியிருந்தார்.
இயற்கை ஆர்வலராகவும், விவசாயத்தை நேசிக்கும் ஒருவராகவும் அவர் தனது அறக்கட்டளை மூலம் இந்த பசுமை பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது சிறுவயதில் நடைபெற்ற ஒரு சம்பவம் தான்…

தனது 10 வயதில் இயற்கை சூழலில் அமைதியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தார் மாதேஸ்வரன். அவரின் தாத்தா சித்தோடு கிராம முன்சீப் ஆக இருந்தார்.
சில பணிகளுக்காக அப்போது ஊரில் இருந்த மரங்கள் சில வெட்டப்பட்டிருந்தது. அப்போது மாதேஸ்வரனின் தாத்தாவிடம் ஊர் மக்கள் மரங்கள் வெட்டப்படுவது குறித்து வேதனை தெரிவித்துக் கொண்டிருந்தனர். “இப்படியே போனால் நம்ம ஊர் பாலைவனம் ஆகிவிடுமே” என அங்கிருந்த ஒருவர் சொல்ல, அந்த வார்த்தை சிறுவனாக இருந்த மாதேஸ்வரன் உள்ளத்தில் ஆழமாக பதிந்தது.
மக்கள் வாழும் அழகிய கிராமம் பாலைவனமாக கூடாது என்றால் அங்கே மரங்கள் தேவை எனவும், இது போலவே பிற ஊர்களும் உயிருள்ளதாக இருக்க மரங்கள் நடுவது சிறந்த தீர்வு என்ற எண்ணம் மாதேஸ்வரன் மனதில் விதையாக சென்று உயிரின் சுவாசம் எனும் விருட்சமாக உருவெடுத்து, இயற்கை அன்னைக்கு சேவை செய்து வருகிறது.

உயிரின் சுவாசம் – இயற்கைக்கு ஒரு விவசாயியின் காணிக்கை
2018ல் டாக்டர் மாதேஸ்வரன் ‘உயிரின் சுவாசம்’ என்ற அறக்கட்டளையை துவங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் 100 மாதங்களில் 10 கோடி மரங்கள் நட்டு பராமரித்து, இயற்கைக்கும், சமுதாயத்திற்கும் பலனாக இந்த பணி அமைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்காக தொடர்ச்சியாக உழைத்து வருகிறார். கோவை, ஈரோடு மாவட்டங்களில் இதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அறக்கட்டளையின் இந்த இலக்கு எப்படி செல்கிறது என்பது பற்றி ‘தி கோவை மெயில்’ தரப்பில் கேட்டதற்கு, “100 மாதங்களில் 10 கோடி மரங்கள் நடவு செய்யும் அந்த முயற்சியில் இப்போது 1.30 கோடி மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் 60% நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. நாங்கள் 3 ஆண்டுக்கு 1 முறை இதற்கான ஆதாரங்களை பதிவு செய்துகொண்டு வருகிறோம்.,” என கூறினார்.
நிகழ்வின் போது அடுத்த 6-7 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டிவிடுவோம் என கூறிய டாக்டர் மாதேஸ்வரன், இதை முடித்து விட்டு வயது அனுமதித்தால் மேலும் 10 கோடி மரங்களை நடவு செய்யும் திட்டத்தை கூட அறிவிக்கலாம் என எண்ணுவதாக ஆர்வத்துடன் கூறினார்.
இயற்கையை பாதுகாத்தால் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்படும்; அதன்மூலம் மனித வளமும் பாதுகாக்கப்படும் என்பதை உறுதியாக நம்பும் டாக்டர் மாதேஸ்வரன், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளால் அருமையான வானிலையையும் வளங்களையும் அனுபவிக்கும் அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும் 100 மாதங்களில் 10 கோடி மரங்கள் நடும் இந்த பெருமுயற்சியை முன்னெடுத்து வருகிறார்.
பூமி வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்தல், மாறி வரும் பருவங்கள் என பல்வேறு பிரச்னைகள் எல்லாமே இயற்கையை நாம் காயப்படுத்துகிறோம் என்பதற்கான இயற்கையின் எச்சரிக்கை மணி. அது திருப்பி அடித்தால் நம்மால் எதிர்க்கமுடியாது. பெரும் ஆற்றல் மிக்க இயற்கையோடு நம்மால் போராடி வெல்ல எப்போதும் முடியாது. அதை அரவணைத்து சென்றால் அமைதியாக வாழ முடியும் என்பதை எடுத்துக்கூறும் மாதேஸ்வரன், இயற்கை அன்னையின் நலனுக்காகவும் நமது அனைவரின் நன்மைக்காகவும், எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும் நம்மால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என விரும்புகிறார்.
உயிரின் சுவாசம் பெருகட்டும், தமிழகம் செழிக்கட்டும்…

