கோவையை சேர்ந்த கோபால்சுவாமி துரைசாமி நாயுடுவை தெரியுமா? என்றால் அந்த காலத்து ஆட்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அறிவியல் துறை சார்ந்தவர்களுக்கும் தெரியலாம். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு ஜி.டி.நாயுடு என்றால் தான் இவரை தெரியும்.

அதுவே இப்போது ஜென்-சி என அழைக்கப்படும் 14 – 29 வயதுக்குள்ளானவர்கள் பலருக்கும் ஜி.டி.நாயுடு என்றால் ஒரு பொறியியல் துறை நிபுணர் என்றே தான் தெரியும்.

நிஜமாகவே ஜி.டி.நாயுடு என்பவர், கோவையின் மிகப்பெரும் பொறியியல் துறை ஆளுமை, விஞ்ஞானி, தொழிலதிபர், பொறியியல் கல்வியாளர், என இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். 20ம் நூற்றாண்டில் இவரின் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் திறமையை வளர்ந்த நாடுகள் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருந்துள்ளது.

1937ல் இந்தியாவின் முதல் உள்நாட்டு மின் மோட்டாரை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இது இவரின் பொறியியல் திறனால் வெளிப்பட்ட எண்ணற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்று மட்டுமே. இதுபோன்று இன்னும் ஏராளம் உள்ளது.

புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றின் உருவாக்கத்திற்கு பின்னால் ஒரு அழகிய கதையும் இருக்கத்தானே செய்யும்? இதை அனைவரும் அறிந்துகொள்ளும் படி நடிகர் மாதவன் நடிப்பில் ‘ஜி.டி.என்’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகை துஷார விஜயன், நடிகர்கள் ஜெயராமன், சத்யராஜ், யோகி பாபு என பலரும் இதில் நடித்துள்ளனர். வரும் ஜூலை 17ல் இந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்பட இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். 96, மெய்யழகன் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த கோவிந் வசந்தா இந்த திரைப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

கோவையை சேர்ந்த ஒருவரை நமது நாடே ‘இந்தியாவின் எடிசன்’ என கருத என்ன காரணம் என்பதை இந்த திரைப்படம் சொல்லும் என எதிர்பார்க்கலாம் ஜூலை 17ல்…