மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கருக்கு பத்து ரூபாய் கூடுதலாக பெறுவது குறித்து அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும், மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதனை வெளி முகமைகள் மூலம் செயல்படுத்த வேண்டும், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டமானது தொடர்ந்து வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்ட நிலையில் இன்று கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் பீளமேடு பகுதியில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட வாணிப கழக மேலாளரும் துணை ஆட்சியருமான சீனிவாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த அவர்கள் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்றும் எனவே மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி சங்க நிர்வாகிகளுடனும் பணியாளர்களுடனும் கலந்தாலோசித்து கடையடைப்பு போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். இதன் காரணமாக வழக்கமாக 12 மணிக்கு திறக்கப்படும் 214 கடைகள் தற்பொழுது வரை திறக்கப்படவில்லை.
இதுகுறித்து பேட்டி அளித்த தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்க மாநில இணைப் பொதுச் செயலாளர் மதியழகன், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் எங்களது தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அதற்கு மாறாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 717 கடைகள் மூடப்பட்டது முதல் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அந்தக் கடைகள் மூடப்பட்டதற்கு வரவேற்பு அளித்தாலும் அதற்கான மாற்று ஏற்பாடுகளை தற்பொழுது வரை செய்து தரவில்லை.
நீதிமன்ற உத்தரவு படி தான் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி பெறப்படுகிறது. ஆனால், அதனை வாடிக்கையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
தற்பொழுது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரவில்லை. முழு கடை அடைப்பை நோக்கி இந்த நிர்வாகம் தங்களை தள்ளுகிறது. தங்கள் தொழிலாளர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களது முடிவு படி தொடர் போராட்டமா என்று முடிவு செய்து அறிவிப்போம். 214, 215 கடைகள் தற்பொழுது மூடப்பட்டுள்ளது.
கேரளாவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அரசே மதுபான கடைகளை இயக்கி வருகிறது. கேரளாவில் அரசாங்கமே மதுபான கடைகளையும் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களில் முறையாக நடத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வாடிக்கையாளர்களுக்கும் சரியான தீர்வு எட்டப்படவில்லை. பணியாளர்களுக்கும் சரியான தீர்வை எட்டப்படவில்லை.
கேரளாவில் இருக்கக்கூடிய விற்பனை மாதிரியை போலவே தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். இங்கு ஆளுகின்ற அரசியல்வாதிகளின் எண்ணப்படி தான் அனைத்தும் நடக்கிறது என்று தெரிவித்தார்.

