சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று வேலூரில் நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, விதைத்தீவு பிரியா ராஜநாராயணன் மற்றும் மகிழ்வனம் மரபு விதைகள் சேகரிப்பு மையத்தின் நிறுவனர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினர்.
செய்தியாளர் சந்திப்பில் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் நஞ்சில்லாத உணவு உற்பத்தியும், விவசாயிகளின் பொருளாதார தற்சார்பும் மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. பாரம்பரிய காய்கறி மற்றும் விதை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகள் மற்றும் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் ஒன்றிணைந்து, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் ஈட்டுவது வரை இந்த மாபெரும் கருத்தரங்கில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.
பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதோடு, அவற்றை வணிக ரீதியாக எப்படி லாபகரமாக மாற்றுவது என்பதை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்த நிகழ்வு அமையும் எனக் கூறினார்.
கருத்தரங்கில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கோ. விசுவநாதன் தலைமையுரை ஆற்றுகிறார். துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் சேகர் விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா சிறப்புரையாற்ற உள்ளார்.
பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் துசார் கந்தி பேஹேரா மற்றும் வேலூர் வி.ஐ.டி விவசாய கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளியின் துறைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான எளிய தீர்வுகள், இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்தி லாபம் ஈட்டும் முறைகள், கீரை சாகுபடி, பாரம்பரிய விதை ரகங்கள், பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தலின் அவசியம், காய்கறி சாகுபடியின் நவீன மற்றும் இயற்கை வழி தொழில்நுட்பங்கள், காய்கறி மற்றும் கீரைகளின் மருத்துவ குணங்கள், பெருநகரங்களில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி மற்றும் மாடித்தோட்டம் அமைப்பதற்கான எளிய வழிமுறை, பாரம்பரிய விதை ரகங்கள் விளைச்சல், அரிய கிழங்கு ரகங்களின் மகத்துவம் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
கண்காட்சி சிறப்பம்சங்கள்
பாரம்பரிய விதைகள், இயற்கை விளைபொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
விதை பாதுகாவலர் விருதுகள் – 2026
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வரும் முன்னோடி விதை பாதுகாவலர்களை கௌரவிக்கும் வகையில், ‘விதைத்தீவு பிரியா ராஜநாராயணன்’ அவர்களின் ஒருங்கிணைப்பில் “விதை பாதுகாவலர் விருதுகள் – 2026” வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரிய பாரம்பரிய விதைகளை சேகரித்து, பாதுகாத்து, பரவலாக்கி வரும் சுமார் 10 முன்னோடி விதை பாதுகாவலர்கள் இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்பட உள்ளனர்.
கருத்தரங்கிலகலந்து கொள்ள முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 83000 93777
