தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) நிர்வாகிகளுடன், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்ட ஜவுளித் தொழிற்துறை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் மற்றும் சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாடு ஜவுளித் தொழிலின் சார்பில் அனைத்து ஜவுளிச் சங்கங்களும் முன்வைத்த கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய காலக்கெடுவில் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழகத்தில் உள்ள தொழில்துறையின் அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு கொள்கை வழிகாட்டுதல் குழுவை அமைப்பதன் மூலம், தொழில் செய்வதை எளிதாக்க சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

சைமா தலைவர் துரை பழனிசாமி முன்வைத்த கோரிக்கைகள்

  • 2018ம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுயபயன்பாட்டு நுகர்வோருக்கான ஆண்டு வங்கி வசதியை வழங்க வேண்டும்.
  • சூரிய ஒளி மின் உற்பத்தியில், பகல் நேர பயன்பாட்டுக்குப் பிறகு மீதமுள்ள மின்சாரத்தை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
  • நிலுவையில் உள்ள (Deemed Demand Charges) கட்டணங்களுக்கான அபராத வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்து, விரைவான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • ஒரு கிலோவோல்ட்- ஆம்பியருக்கு மாதம் ரூ.608 என்ற தற்போதைய டிமாண்ட் கட்டணத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமின்றி தொடர வேண்டும்.
  • கூரைமீதான சூரிய மின் உற்பத்திக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • புதிய முதலீடுகளுக்கான திறந்த அணுகல் மின்சாரத்திற்கு குறுக்கு மானியம் மற்றும் கூடுதல் கட்டணங்களிலிருந்து 10 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும்.
  • ஜவுளித் தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுநீரை போட்டித்திறன் மிக்க செலவில் சுத்திகரித்து அகற்றுவதற்கான நீண்டகால நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.