இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குநராகத் திருப்பூரைச் சேர்ந்த கலைசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த அமைப்பை வழிநடத்தும் முதல் தமிழர் ஆவார்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள சோமன் கோட்டை கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் கலைசெல்வன். அரசு பள்ளியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
1993 – 99 காலகட்டத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருந்தியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும், 2008ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, மருந்தியல் மற்றும் மருந்துத் தரநிலைகள் அமைத்தல் போன்ற மருந்துத் துறையில் இருபது ஆண்டுகள் பன்முக அனுபவம் கொண்டவர்.
தற்போது இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மருந்தக கண்காணிப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற இவர், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
2000ம் ஆண்டில் கே.எம்.சி.ஹெச் பார்மசி கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். 2009ம் ஆண்டு இந்திய மருந்தியல் ஆணையத்தின் மூத்த அறிவியல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், முதன்மை அறிவியல் அதிகாரி, மூத்த முதன்மை அறிவியல் அதிகாரி என பதவி உயர்வு பெற்று, தற்போது செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் இந்த அமைப்பை வழிநடத்தும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருந்தியல் ஆணையம் என்பது, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆணையம் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாட்டில் மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 2010ம் ஆண்டு இந்திய மருந்துகள் கண்காணிப்புத் திட்டம் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மருந்தக கண்காணிப்பு, பயிற்சி, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருந்தியல் கண்காணிப்பு திட்டத்தை (மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டம்) நிறுவுவதில் கலைசெல்வன் செயல்பட்டுள்ளார். மருத்துவ சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு திட்டத்தில் திறன் மேம்பாடு மற்றும் வலுப்படுத்துவதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார நிறுவனம், மருந்தியல் விழிப்புணர்வின் 50வது கொண்டாட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களில் ஒருவராக இவரை அங்கீகரித்துள்ளது. இவர் ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். 130 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.