கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரன் ஜானகிராமன், ஃப்ளக்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.  மருத்துவத் துறைக்கு ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புகள், மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்திற்காக இந்த அங்கீகாரம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது ஹாங்காங்கில் ஜூன் 6 அன்று நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது. ஃப்ளக்ஸ் ஈவென்ட்ஸ் என்பது, தங்கள் துறைகளில் தனிச்சிறப்பான அர்ப்பணிப்பு, புதுமை, தலைமைத் திறனை வெளிப்படுத்தும் ஆளுமைகளை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தும் தளமாகும்.

இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியர் சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஃபார்ச்சுனா உலகளாவிய சிறப்பு விருதையும் அவர் பெற்றுள்ளார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்திய முதன்மை செயல் அதிகாரி ஆவார்.

முப்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட டாக்டர் சிவகுமாரன், மருத்துவத் துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வழங்கும் மருத்துவ தொலைநோக்கு விருது மற்றும் உலக சுகாதார மற்றும் ஆரோக்கிய காங்கிரஸ் இடமிருந்து விருதையும் பெற்றுள்ளார்.

கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்: டாக்டர் சிவகுமாரன் மதிப்புமிக்க  அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவரது தலைமைத் திறனும், மருத்துவ சேவைகளை  மேம்படுத்துவதற்கான ஆர்வமும் கே.எம்.சி.ஹெச் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் கருவியாக இருந்துள்ளன எனக் கூறினார்.

செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில்: டாக்டர் சிவகுமாரனுக்கு வாழ்த்துக்கள். அவரது தொலைநோக்கு பார்வை, அயராத அர்ப்பணிப்பு ஆகியவை மருத்துவமனையை புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளது எனக் கூறினார்.